×

களக்காடு வரதராஜபெருமாள் கோயில்பங்குனி பிரமோற்சவத்தில் தேரோட்டம்

களக்காடு, ஏப்.6: களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில் பங்குனி பிரமோற்சவ திருவிழாவில் தேரோட்ட வைபவம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் திரளாகப் பங்கேற்ற பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து நிலையம் சேர்த்தனர்.
நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரமோற்சவ திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டுக்கான பங்குனி பிரமோற்சவ திருவிழா கடந்த மார்ச் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை பெருமாள் மற்றும் தாயார்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதும் வீதியுலா நடந்து வருகிறது. திருவிழாவின் 5ம் நாளன்று கருட சேவையும், 7ம் திருநாளன்று வரதராஜபெருமாள் திருக்கல்யாண வைபவமும் நடந்தது. 8ம் திருநாளையொட்டி கடந்த 3ம் தேதி பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி வந்தார்.

விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் 10ம் திருநாளான நேற்று (5ம் தேதி) நடந்தது. இதையொட்டி காலையில் வரதராஜபெருமாள் மற்றும் தாயார்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தாயார்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். அதன் பின் மாலையில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். பலவண்ண துணிகளாலும், பூக்களாலும் திருத்தேர் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ரதவீதிகளை சுற்றி வந்து, இரவில் திருத்தேர் நிலையை வந்தடைந்தது. களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப்ஜெட்சன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் வரதராஜபெருமாள் தேர் தடம் பார்க்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. 11ம் நாளான இன்று (6ம் தேதி) தீர்த்தவாரி நடக்கிறது.

The post களக்காடு வரதராஜபெருமாள் கோயில்
பங்குனி பிரமோற்சவத்தில் தேரோட்டம்
appeared first on Dinakaran.

Tags : GALLACKadu ,Varadarajapurumal ,Coilpanguni ,GALLACKADA ,Derota Varadarajapurumal ,Temple ,Bankuni Pramoreshava Festival ,Khalakkadam Varadarajapurumal Temple ,Panguni Pramoarshavam Try ,
× RELATED வரதராஜபெருமாள் கோயிலுக்கு சொந்தமான...